சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஷர்மிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இந்துமதி ஓமலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை இந்துமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையை மட்டும் காண்பித்து விட்டு இந்துமதி மயக்கத்தில் இருப்பதாக கூறி உறவினர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி இந்து மதியை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.