நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பொன்மலை தர்மபுரியில் மருந்து விற்பனை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக பொன்மலையின் மனைவி சுமதி செயல்பட்டுள்ளார். இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி கிஷோர் குமாரின் தங்கை செல்வி 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயும், ராஜேஷ் கண்ணன் என்பவர் 10 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
அதன் பிறகு பொன்மலையும், சுமதியும் இணைந்து விற்பனை செய்த மருந்துக்கு முறையாக கணக்கு காட்டாமல் செல்வி மற்றும் ராஜேஷ் கண்ணனுக்கு கொடுக்க வேண்டிய 27 லட்சத்து 93 ஆயிரத்து 831 ரூபாயை கையாடல் செய்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கிஷோர் குமார் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பொன்மலை, சுமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.