தற்போது, இணையதளங்களில் பல்வேறு வகை மோசடிகள் பெருகி வருகின்றன. அதில் ஒன்று ஆபாச தளங்களைப் பார்த்ததாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி ஆகும். சைபர் குற்றவியல் போலீசார் வெளியிட்ட எச்சரிக்கையில், பலர் தங்களது கணினி முடக்கப்பட்டுவிட்டதாக ஒரு போலி செய்தியைப் பெறுகின்றனர். அதில், அவர்கள் சில ஆபாச தளங்களைப் பார்த்ததால் கணினி முடக்கப்பட்டுவிட்டதாகவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படும்.

தண்டனையிலிருந்து விடுபட ரூ.30,290 அபராதத்தை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்த வேண்டும் என்று காட்டப்படும். இந்த செய்தியை நம்பி, பலர் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்வார்கள். இதனால் மோசடிக் கும்பல் அந்த விவரங்களை திருடி, கணக்கிலிருந்து பணத்தைப் பறிக்க முடியும். இந்த மோசடி வலைதளங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சீனாவிலிருந்து சேவையைப் பெறுகின்றன என காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மோசடிகளில் ஏமாறாமல் இருப்பது மிகவும் முக்கியம். அரசு வலைதளங்களில் gov.in அல்லது nic.in போன்ற தள முடிவுகளை கவனமாக பார்க்க வேண்டும். போலியான வலைதளங்களில் சிறிய எழுத்துப் பிழைகள் இருக்கும். அதை உணர வேண்டும். சைபர் குற்றவியல் பிரிவுக்கு 1930 என்ற எண்ணில் அழைத்து புகார் கொடுக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.