வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு போதுமான சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் மூலம் சிவகாமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் உறவினர்கள் சிவகாமியை நடை பயணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தெள்ளை மலை கிராமம் வழியாக பிரசவ வலியோடு சிவகாமி நடந்தே துத்தி காட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஆட்டோ மூலம் சிவகாமியை பாகாயத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நீண்ட காலமாக பொதுமக்கள் சிரமப்படுவதால் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.