இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை ஐகோர்டின் உத்தரவுபடி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், மனுதாரர், கே சி பழனிச்சாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக மனு கொடுத்துள்ள சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் கிடையாது.

அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர் கட்சி மற்றும் சின்ன தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரமும் இல்லை, அதோடு கட்சியின் உள்விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எம் ஜி ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்ற தடை தொடர்கிறது.