
ஹைதராபாத்தில் 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குனராகவும் வி.சி ஜனார்த்தன் ராவ்(86) என்பவர் இருந்துள்ளார். இவருக்கு கீர்த்தி தேஜா(28) என்ற பேரன் இருக்கிறார். இவர் தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாக்கு திரும்பியுள்ளார். ஜனார்த்தன் சமீபத்தில் தனது மூத்த மகளின் மகனான ஸ்ரீ கிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குனராக நியமித்தார். அதோடு அவரது 2-வது மகளின் மகனான கீர்த்தி தேஜாவுக்கு 4 கோடி மதிப்புள்ள பங்குகளை கொடுத்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கீர்த்தி தேஜா மற்றும் அவரது தாயரும் தாத்தா வீட்டிற்கு சென்றனர்.
அங்கு தேஜா தனது தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தாய் தேநீர் தயாரிக்க சமையலறைக்கு சென்றார். அப்போது தாத்தாவுக்கும், பேரனுக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பதவி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமையை இழந்த தேஜா தான் கொண்டு வந்த கத்தியை கொண்டு தாத்தாவை சரமாரியாக குத்தினார். அவர் 73 முறை தனது தாத்தாவை கத்தியால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வந்த அவரது தாயாரையும் தேஜா கத்தியால் குத்தினார்.
இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த செக்யூரிட்டியை மிரட்டி விட்டு தேஜா அங்கிருந்து தப்பி ஓடினார். 4 கத்தி குத்து காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தப்பிய ஓடிய தேஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். தேஜாவுக்கு போதை பழக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது.