
கோடை காலம் நெருங்கி வருவதால் குடிநீர் கட்டுப்பாடு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரி மாநில அரசு கிராமப்புறங்களில் விரிவான குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குடிநீர் சுத்திகரித்து மானிய விலையில் வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால் தற்காலிகமாக குடிநீர் பற்றாக்குறை குறித்த பிரச்னையை சரிசெய்ய அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, “புதுச்சேரியில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் புதுச்சேரி கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்”.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கிராமப்புறங்களில் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்கான திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவை என்பதால், அதுவரை புதுச்சேரி மக்களுக்கு இலவசமாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.