
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் இட ஒதுக்கீடை ரத்து செய்வோம் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் பரிசு தருகிறேன் என்று கூறினார். அதோடு அவருடைய பாட்டி இந்திரா காந்தி போன்று தான் ராகுலுக்கும் விதி அமையும் என்று கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மிரட்டல்கள் வருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.