தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் 18 முன்னணி நிறுவனங்களுடன் 7618 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 11,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக கூறியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்கு சென்ற போது 10 சதவீதம் கூட முதலீடுகள் கையெழுத்தாகவில்லை.

இதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் அவருக்குத்தான் அவமானமாக இருக்கும். நான் அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே வெளிநாட்டு பயணம் முதலீடுகள் குறித்து விளக்கியுள்ளேன். இது தொடர்பாக தொழில்துறை அமைச்சரும் விளக்கம் கொடுத்துள்ளார். இதைப் பற்றி சட்டமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. எனவே அவற்றையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அமெரிக்க பயணம் மிகவும் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.