
சென்னை அரும்பாக்கம் பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகின்றார். இவர் நில மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரட்டூர் கிராமம் டி வி எஸ் நகரில் 2,112 சதுர அடி இடத்தை எனது கணவர் முரளி 1990 ஆம் ஆண்டு கிரயம் பெற்றார். அவர் 2018 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அதன் பிறகு சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளது.
இந்நிலையில் மேற்கூறிய நிலத்தின் மின் இணைப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. பின்னர் விசாரணை நடத்திய போது கீர்த்திகா என்பவர் சதீஷ் என்பவரிடமிருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கிரயம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து சதீஷ் என்பவரை விசாரித்த போது தான் முரளி என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறினார். இந்நிலையில் என் கணவர் 2018 இல் இறந்துவிட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு சதீஷ் என்பவருக்கு எப்படி கிரயம் செய்திருக்க முடியும்.
ஆகவே போலி ஆவணங்கள் தயாரித்து எனது கணவர் முரளி பெயரில் ஆள் மாறாட்டம் செய்து எனது சொத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். அதன் பெயரில் வழக்கப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆள் மாராட்ட முரளி என்பவர் ஹரிகிருஷ்ணன் என்பவர் உடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து உண்மையான முரளி போன்ற ஆள் மாறாட்டம் செய்தது தெரிய வந்தது.
மேலும் தங்களுக்கு சொந்தம் இல்லாத சொத்தை வேறு நபர்களுக்கு விற்று உள்ளனர். இதனை தொடர்ந்து போலி பத்திரம் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட இருவரையும் ஆவடி மத்திய குற்ற பிரிவு ஆய்வாளர் மேற்பார்வையில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்து பூந்தமல்லி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.