இன்றைய காலத்தில் ரீல்ஸ் எடுத்து அதிக லைக்குகளை வாங்குவதில் மட்டுமே பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக உயிரை பணயம் வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதேபோன்று வீடியோ எடுக்க சென்ற பெண் கங்கை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி பகுதியில் உள்ள மணிகர்ணிகா கங்கை ஆற்றின் படித்தரையில் பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக இறங்குகிறார். சிறிது தூரம் தண்ணீருக்குள் ஆழமாக சென்ற போது திடீரென்று கால் இடறி தண்ணீரில் விழுந்தார்.

அப்பகுதியில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்த சமயத்தில் நீரில்  உடனே அடித்து சொல்லப்பட்டார். படித்தரையில் நின்று கொண்டிருந்த அவரது குழந்தை “மம்மி, மம்மி” என கத்துவது மட்டும் வீடியோவில் கேட்டது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை அந்தப் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வீடியோக்களுக்காக இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த இன்றைய சமூகத்தினருக்கு விழிப்புணர்வு அவசியம் என சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.