
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்கின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பிரேசில் நாடு தடை விதித்தது. எக்ஸ் தளத்தில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடுவது, விமர்சனங்கள் செய்வது என பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளத்திற்கு குறிப்பிட்ட கால தடை விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தடையை மீறி எக்ஸ் தளத்திலிருந்து தகவல்கள் வெளியாவதை கவனிக்க பிரதிநிதியை அமர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் எலான் மஸ்க்க்கு அறிவுறுத்தியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எலான்மஸ்க் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பிரேசிலில் முழுவதுமாகவே எக்ஸ்தளம் தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால் எலான் மஸ்க் பிரேசில் அரசாங்கத்துக்கு 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பு 28,600,000 ரூபாய்) அபராதம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. எக்ஸ் தளத்தை மீட்கும் பொருட்டு எலான் மஸ்க் அபராத தொகையை வழங்க முடிவெடுத்தார். இந்நிலையில் இந்த அபராத தொகையை தவறாக வேறு வங்கி கணக்கிற்கு எலான்மஸ்க் செலுத்தியுள்ளார்.
இதனால் இந்தப் பிரச்சனை மீண்டும் சிக்கலாகியது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் நீதிபதியான அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், அபராத தொகையை மீண்டும் எலான் மஸ்க் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்ப ஆணையிட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் தளம் மீண்டும் தனது சேவைகளை தொடர தேவையான அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.