பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா பாஜகவுக்கு ஆதரவளித்ததால் அவரது ரூபாய் 18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை நடிகை பிரீத்தி ஜிந்தா முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, “12 ஆண்டுகளுக்கு முன்பு நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ஓவர் டிராப்ட் வசதி இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓவர் ட்ராப்ட் வசதிக்கான முழு நிலுவைத் தொகையையும் நான் முழுமையாக திருப்பி செலுத்தினேன். அதன்படி கணக்கு முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

என் சமூக ஊடக கணக்குகளை நானே இயக்குகிறேன். போலி செய்திகளை காங்கிரஸ் கட்சியினர் விளம்பரப்படுத்தியதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். யாரும் எனக்காக எதையும் எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சியோ அல்லது அவர்களின் பிரதிநிதியோ, போலி செய்திகளை ஊக்குவித்து என் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்தி மோசமான வதந்திகளை கூறி வருகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடன் தரப்பட்டு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து எதிர்காலத்தில் எந்த ஒரு தவறான புரிதல்களும் ஏற்படாமல் இருக்க உதவும் என நம்புகிறேன்”. இவ்வாறு தனது இணையதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.