தொழிற்சாலைகளில் பயணப்படுத்தப்படும் மின்சாரத்தின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதே போன்று வீடுகளிலும் டிஜிட்டல் முறையை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, ஊழியர்கள் நேரில் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, அட்டையில் எழுத வேண்டும். அதன் பின் அதனை கணினியில் பதிவேற்றம் செய்து அடுத்த சில நாட்களில் மின்கட்டணம் விவரம் குறித்து பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு SMS  அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் வீடுகளிலும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் செயல்பட உள்ளது. இதற்கு 3.03 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற நிறுவனங்கள் அதிக விலை கேட்டதால் ஓராண்டு டெண்டர் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையில் மத்திய அரசின் மறு சீரமைப்பு மின் விநியோகத் திட்டத்தின் கீழ், உயிரழுத்த மற்றும் தாழ்வழுத்த பிரிவுகளுக்கு ஒருங்கிணைத்த பில்லிங் முறையை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதற்கு தேவையான ஆலோசனை வழங்க தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய தற்போது டெண்டர் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் மென்பொருள் கடந்த 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது நவீன வகையில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதற்கு ஏற்ப பில்லிங் முறைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளது, இது ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான முன்னோட்டமாக இருக்கும். இதன் வாயிலாக ஸ்மார்ட் மீட்டர்  பொருத்தப்பட்ட பிறகு வீடுகளை மாதந்தோறும் மின்னஞ்சல் SMS வாயிலாக மட்டுமே மின் கட்டணம் விவரம் அனுப்பப்படும்.