
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் மானசா அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் அயனாவரம் சுப்பராயன் தெருவில் இருக்கும் ஒரு வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு குத்தகைக்கு கொடுப்பதாக கூறி கீதா கிருஷ்ணன் 2.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் கூறியபடி கீதா கிருஷ்ணன் லட்சுமிபதிக்கு வீட்டை கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இது தொடர்பாக கேட்க லட்சுமிபதி நேற்று முன்தினம் கீதா கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது கதவு பூட்டி கிடந்ததால் லட்சுமிபதி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கீதா கிருஷ்ணன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது கீதா கிருஷ்ணன் தூக்கிலும் மானசா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கடந்த 2005-ஆம் ஆண்டு கீதா கிருஷ்ணன் கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் கல்பனா கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு குணாலி ஸ்ரீ, மானசா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் கல்பனாவும் மூத்த மகள் குணாலி ஸ்ரீயும் தற்கொலை செய்து கொண்டனர். அதே நேரம் தற்கொலை செய்யும் எண்ணத்தை மாற்றி கீதா கிருஷ்ணன் தனது மகள் மானசாவை தூக்கிக்கொண்டு திருப்பதிக்கு சென்றார். சிறிது நாட்கள் கழித்து கீதா கிருஷ்ணன் சென்னை வந்த பிறகு கோட்டூர்புரம் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த கீதகிருஷ்ணன் தனது இரண்டாவது மகளுடன் அயனாவரத்தில் இருக்கும் வீட்டில் குடியேறினார். அதன் பிறகும் கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் ஆசையாக வளர்த்த மகள் மானசாவை உறவினர்கள் யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவரை கழுத்தை நிறுத்தி கொலை செய்தார். பின்னர் கீதா கிருஷ்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.