
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் பலர் ஜகபர் அலி கனிமவளக் சுரண்டலுக்கு எதிராக போராடி வந்துள்ளதாகவும், கடைசியாக அவர் கனிமவள சுரண்டலுக்கு எதிராக மனு கொடுத்த 7 நாட்களில் உயிரிழந்துள்ளது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஜகபர் அலி திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமவள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரத்துடன் கடந்த ஜனவரி 10ஆம் தேதி புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவில் அவர் குவாரிகளின் பெயர்கள், பல ஆதாரங்களை இணைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்ததால் காவல்துறையினர் இந்த வழக்கை விபத்து வழக்கிலிருந்து, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் கல் குவாரி உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ராமையா, ராசு, தினேஷ்குமார், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் அவர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின் ஆட்சியர் அருணா குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.