
இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் லைக் மற்றும் வியூஸிற்காக இளைஞர்கள் பல வித்தியாசமான சாகசங்களை செய்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் இளைஞர் ஒருவர் புது விதமான முயற்சியில் எடுப்பட்டுள்ளார். அதாவது அந்த இளைஞர் கருப்பு நிற ஆடையில், வெள்ளை நிறத்தில் எலும்பு கூடு படம் வரைந்து, பேய் போன்ற தோற்றத்தில் துள்ளிக் குதித்து பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றித்திரிந்தார்.
இதை அங்கிருந்த சில வாலிபர்கள் அவர்களது ஃபோனில் படம் பிடித்தனர். இதுபோன்று வாலிபர் ஒருவர் பேய் வேடத்தில் உலாவியதால் பெண்களும், குழந்தைகளும் பயந்தனர். இதுகுறித்து அந்த இளைஞரிடம் கேட்டபோது யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரபலமடைவதற்காக பேய் வேடத்தில் மக்கள் மத்தியில் உலாவியதாக கூறினார். இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.