
திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும் சென்றுள்ளனர்.
அப்போது பலத்த காற்றால் தோட்டத்துக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் சென்ற மாதேஷ் மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கண்முன்னே மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்ட தாயும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதுகுறித்து அறிந்த சீதபற்நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.