அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, FIR இப்படி பதிவு செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வது தான் FIR, இந்த வழக்கிலும் அப்படி தான் பதிவு செய்துள்ளோம். அதன் பின்பு தனிப்படையை அமைத்து விசாரிக்க தொடங்கினோம். அந்த விசாரணையில் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, செல்போன் டவர் லொகேஷன், CDR எல்லாம் பதிவிட்டு கடந்த 25ம் தேதி குற்றச்சாட்டப்பட்ட நபரை பிடித்தோம்.

அந்த நபர் குற்றம் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை செய்து அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின் சிறையில் அடைத்தோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு FIR பதிவு செய்யும்போது, CCDNS எனும் ஆன்லைன் போர்ட்டல் ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகிடும். ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த FIR-ஐ பதிவு செய்யும்போது, ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகுவது தாமதமாகி இருக்கிறது. இதனால் சிலர் இதை பார்த்து பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் மூலம் இந்த FIR வெளிவந்து இருக்கலாம். அல்லது FIR -ஐ பதிவு செய்தாலும் புகாதாரத்துக்கு ஒரு காப்பி கொடுப்பது வழக்கம்.

அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு காப்பி கொடுத்தோம். இந்த 2 வழிகளில் தான் FIR வெளியே வந்திருக்க வேண்டும். இந்த வழக்குகளில் FIR வெளியே வந்திருக்கக் கூடாது, இது சட்டப்படி குற்றம். இந்த FIR ஐ வெளியே கசிய விட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புலன் விசாரணையை வெளியே சொல்ல கூடாது, ஆனால் சிலர் இதை வைத்து அரசியல் செய்வதால் நான் சொல்லுகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி. அவர் யாரிடமும் பேசவில்லை. அவரது செல்போனை பறிமுதல் செய்யும்போது, ஏரோபிளேன் மோடில் இருந்தது. அவர் யாரிடமும் போனில் சார் என பேசவில்லை, மிரட்டுவதற்காக அப்படி சொல்லி உள்ளார்.