கோயம்பத்தூர் மாவட்டத்தில்  உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்கள், லாட்ஜ்கள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை காவல் ஆய்வாளர் அருண், நிஷா தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட போலீசார், இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள், பைகள் உள்ளிட்டவற்றை தீவிரமாக சோதனை செய்தனர். தற்போது வரை எந்தவித போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.