
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரேயாஸ் பாட்டில் (19). இவர் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன் பைக்கில் சென்றுள்ளார்.
இருவரும் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிஸ்டன்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பைக் தனது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதியதில் இருவரும் 25 அடி உயரப் பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
அந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஜெயின் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.