டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி முழுவதும் திடீரென புழுதி புயல் ஏற்பட்ட சமயத்தில் திடீரென கட்டிடத்தின் ஒரு சுவர் இடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது விழுந்தது. இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பிறகு 2 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக கிழக்கு டெல்லி ஏடிசிபி கூறும்போது இரவு 7 மணி அளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவி இடத்திற்கு சென்ற போது 6 மாடி கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததும், புயல் காரணமாக அதன் சுவர் இடிந்து விழுந்ததும் தெரிய வந்ததாக கூறினார். அதோடு இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறினார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.