கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை முதல் ஷிப்ட்க்கு பணியாளர்கள் வந்துள்ளனர். அப்போது  தொழிற்சாலையில் நான்காவது பகுதியில் திடீரென தீ பற்றி கொண்டது. ரசாயன பொருள்கள் பயன்படுத்தும் பகுதி என்பதால் தீ அதிவேகமாக பரவி உள்ளது. இந்நிலையில் தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். முன்னதாக இரவு ஷிப்ட்க்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். தீயணைப்புத் துறையினரின் அறிவிப்புப்படி பாதுகாப்பிற்காக பணியாளர்கள் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ விபத்து பகல் பொழுதில் ஏற்பட்டதால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.