
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக பைக் ஒன்று ஊத்தங்கரையிலிருந்து, ஓலைப்பட்டி நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்தது. பைக்கை ஓட்டியவர் அதிவேகமாக வந்ததால் பேருந்து நிலையத்தில் நின்ற கிருஷ்ணன் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணன் மருத்துவ பலன் இன்றி இறந்து விட்டார். கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் கொடுத்தனர். இந்நிலையில் கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி கிருஷ்ணனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஊத்தங்கரை- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன், காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உசேன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
மேலும் விபத்து ஏற்படுத்தியவரை நிச்சயமாக கைது செய்வோம் என உறுதி கூறினர்.அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணனின் உடலை கொண்டு சென்றனர். அரசு அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டிய ராகுல் காந்தி (32) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.