
தமிழகத்தில் தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அரிசி விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கிலோ புழுங்கல் அரிசியின் விலை ரூபாய் 50 முதல் 76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரிசியின் விலையானது உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பொறுத்து விலை மாறுபடுகிறது. ஒரு கிலோ பிராண்டட் அரிசி சுமார் ரூபாய் 70 க்கும் மேல்தான் விற்கப்பட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நெல் சாகுபடி குறைவு, வேலையாட்களின் சம்பள உயர்வு, அதிகரிக்கும் உற்பத்தி செலவு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் அரிசியின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலய உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர்கள் சங்க சம்மௌன தலைவர் டி. துளசிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் ஆகியோர் பேட்டி ஒன்று அளித்துள்ளனர். அதில் “தமிழகத்தில் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவைப்படுவதாகவும் ஆனால் 70 முதல் 72 லட்சம் டன் மட்டுமே கிடைக்கிறது.
இதைத்தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து 25 முதல் 30 லட்சம் டன் வரை அரிசி அல்லது நெலாகவோ கொண்டு வரப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லாமல் காணப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறி அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நெல் அறுவடை காலத்தில் அரிசியின் விலை குறையும் அறுவடை இல்லாத காலத்தில் அரிசியின் விலை உயரவும் இவ்வாறு மாறி மாறி விலை இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால் கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசியின் விலை அதிகமாக உயர தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வணிகர்கள் அரசிடம் 20 சதவீத சுங்கவரி விதிக்க கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்றுமதி குறைந்து அரிசியின் விலை சீரானது. ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் மூலமாக கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் அரிசி ஆலைகளில் வேலை செய்ய வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்றுமதி கூலி போன்றவற்ற செலவுகளால் அரிசியின் சில்லறை விலையில் மாற்றம் வருகிறது” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.