பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மணிலாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு கடந்த புதன்கிழமை இரவு 10 மணி அளவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் 355 பயணிகள் உட்பட 4 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற விமானத்திலிருந்த ஏர் கண்டிஷனரில் ஒன்று திடீரென புகையை வெளியிட தொடங்கியுள்ளது.

இதனால் அங்குள்ள பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மூக்கை மூடியபடி புகையிலிருந்து தப்பிக்க முயன்றனர். உடனே  அவசர நிலை காரணமாக விமானம் ஜப்பானில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பத்துக்கு பிறகு பிலிப்பைன்ஸ் போக்குவரத்து செயலாளர் வின்ஸ் டிசான், விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்துக்கான காரணங்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், சிவில் ஏரோநாட்டிக்ஸ் வாரியம் இணைந்து விசாரணை நடத்த உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தரையிறங்கிய போது பயணிகளுக்கு தேவையான உதவிகளை பிலிப்பைன்ஸ் விமான நிறுவனம் வழங்கவில்லை என்பது குறித்து  அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் விமான பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்வியையும் எழுப்பி உள்ளது.