
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக இருக்கும் தியாகராஜன் என்பவர் முகுந்தன் கொண்டு வந்த 450 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் ஒரு மூட்டைக்கு 55 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து முகுந்தன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முகுந்தன் தியாகராஜனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தியாகராஜனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.