தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருக்கிறது. 5100 டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில் வருடத்திற்கு 44,000 கோடி வருவாயாக கிடைக்கிறது. பாஜக மது கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என கூறவில்லை. முடிந்தவரை கட்டுப்பாட்டுகள் வைத்திருத்து 3 வருடங்களில் 80 சதவீதம் வரையாவது குறையுங்கள் என்று தான் கூறுகிறது.

ஆனால் வருடத்திற்கு 44 ஆயிரம் கோடி வருவாய் தரும் டாஸ்மாக் கடைகளை எப்படி மூட முடியும் என திமுக அரசு கேள்வி எழுப்புகிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. எந்த தாய்மார்களை கேட்டாலும் எப்படியாவது இந்த டாஸ்மாக் கடைகளை மூட வையுங்கள் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் திமுக அரசு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு டார்கெட் நியமிக்கிறது. இந்த டார்கெட்டை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதோடு டார்கெட்டை முடிக்காத நபர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு ஏதோ ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்வது போன்று மதுவை விற்று வருகிறது என்று கூறியுள்ளார்.