அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டெஸ்லா நிறுவனத்தின் புதிய மின்சார வாகனமான சைபர்டிரக்கில் ஒரு நபர் ஸ்வஸ்திகா சின்னம் வரைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் அவென்யூ பகுதியில் அவி பென் ஹமோ என்பவர் தனது சைபர்டிரக்கை நிறுத்தி விட்டு சென்றிருந்தார். அப்போது, மைக்கேல் லூயிஸ் (42) என்ற நபர், தனது சுபாரு கார் மூலம் அங்கு வந்து, காரில் இருந்து இறங்கி, அந்த காரில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்து விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது தூரத்தில் இருந்தே அவி பென் ஹமோ இந்த செயலை கவனித்து, உடனடியாக மைக்கேலின் காரை முற்றுகையிட்டு, அவரை விளக்கமளிக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், மைக்கேல் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஒன்றரை மணிநேரம் கழித்து, தனது காரை மீண்டும் எடுக்க வந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில், மைக்கேலின் வழக்கறிஞர் லூக்காரெள்ளி, “அவர் எந்த தவறும் செய்யவில்லை, மேலும் கார் சேதமடையவில்லை, எனவே அவர் மன்னிப்புக் கேட்க தேவையில்லை” என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ்  ஊடகத்தில் கண்டன பதிவை வெளியிட்டார். “முட்டாள் மக்கள்” என கூறியதோடு, இந்த செயலை அவர் கடுமையாக கண்டித்தார். மேலும், “சுபாரு நிறுவனத்தின் வாகனம் ஓட்டும் ஒருவர் இப்படித்தான் நடந்து கொள்வார்” என குறிப்பிட்டு, சுபாரு நிறுவனம் மீதும் தனது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு, முட்டை வீசப்பட்ட சம்பவம், நாயின் கழிவு பூசப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பிறகு, இது மூன்றாவது முறையாக சைபர்டிரக் தொடர்பான சர்ச்சையான சம்பவமாக மாறியுள்ளது.