
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்தப் பெண் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார்.
அதேபோல பாலசுப்பிரமணியம் தனது மகனும் சட்டக் கல்லூரி மாணவருமான ஹரிஹரனை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஹரிஹரன் அந்தப் பெண் ஊழியரின் கணவரை தாக்கியதும் இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து சராமாரியாக சட்டக் கல்லூரி மாணவனை வெட்டியுள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் நின்றவர்கள் தலை தெரிக்க ஓடியுள்ளனர். இதில் ஹரிஹரனுக்கு முதுகில் அருவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.