சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு நாய் கடித்ததாகவும், அதனால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

இது தொடர்பாக சிறுவனிடம் நாய் கடித்ததா என்று கேட்டபோது அந்த சிறுவன் “நான் விளையாடிக் கொண்டிருந்த போது நாய் கடித்தது” என்று கூறினான். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது “சிறுவனுக்கு நாய் கடித்த நிலையில் பல நாட்களாக அது பற்றி தன் பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளான். இதனால் தான் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்” என்பது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்கள். மேலும் தற்போது பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதால் சிறுவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நாய்களின் உமிழ்நீர் பட்டால் கூட அதற்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.