
மத்திய பிரதேசம் அடுத்துள்ள இந்தூரில் மும்தாஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜயித்(30) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது சிறுவயதில் நன்றாக பாடுவார் மற்றும் திறமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தன்னுடைய 9 வயதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஜயித்தின் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் அவரது தாய் மும்தாஜ் தான் ஜயித்தை வளர்த்து வந்துள்ளார். மருத்துவ செலவுக்கு காசு இல்லாததால் ஜயித்தை அப்படியே விட்டுள்ளார். ஜயித்துடன் பிறந்த சகோதரியான சாரா அவரது அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நாளுக்கு நாள் அவரது மனநிலை பாதிப்படைந்து அப்பகுதியில் வரும் மக்கள் மீது கல் எறிவதுடன், பெண்களையும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் மும்தாஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜயித்தை வீட்டின் முன், இரும்பு கம்பியால் கை மற்றும் காலையும் கட்டி வைத்துள்ளார். இதன் மூலம் அவர் வெறும் 5 அடி மட்டுமே நகர முடியும். அது திறந்தவெளி என்பதால் காற்று, மழை, வெயில் என்று அனைத்தையும் அனுபவித்து வந்துள்ளார். அவருக்கு பசி எடுத்தால் சில சமயம் கத்துவார், சில சமயம் அமைதியாக இருப்பார் என்று அப்பகுதி மக்களுக்கு கூறுகின்றனர்.
அவரது பரிதாபம் நிலையை கண்ட வியாபாரிகள், வழிப்போக்கர்கள், அப்பகுதி மக்கள் யாராவது அவ்வபோது உணவு அல்லது குடிநீர் கொடுப்பதுண்டு. இந்நிலையில் இவர் மீது பரிதாபம் கொண்ட சிலர் இதுகுறித்து ‘சன்ஸ்தா பிரவேஷ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் மும்தாஜிடம் அவர் காலில் கட்டப்பட்டுள்ள இரும்பு சங்கிலி அகற்றுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். பின்னர் தொண்டு நிறுவனத்தினர் இரும்புச் சங்கிலியை உடைத்து ஜயித்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.