
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், தீபீந்தர் கோயல் பணியில் ஈடுபட்டிருந்தபோது குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலில் உணவை பெறுவதற்காக சென்றுள்ளார்.
மாலின் நுழைவாயிலில் பாதுகாவலர்கள் அவரை லிப்டில் செல்லக்கூடாது படிக்கட்டுகள் வழியாக செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் இணையதளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் தெரிவித்ததாவது, எனது இரண்டாவது ஆர்டரின் படி நான் மாலில் உணவு வாங்க சென்றபோது டெலிவரி பணியாளர்கள் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது.படிக்கட்டுகள் வழியாக செல்லுமாறு கூறினர். இதனால் படிக்கட்டுகள் வழியாக ஏறி சென்றேன் மேலும் ஆர்டரை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
மாலின் முதல் நுழைவாயில் வழியாக டெலிவரி பணியாளர்களுக்கு அனுமதி இல்லை. வேறு வழியாக தான் செல்ல வேண்டும் என கூறினர். எனவே, மால்களுடன் எங்களது நிறுவனம் அதிக அளவில் நெருங்கி பணியாற்றவில்லை என்பதை உணர்ந்தேன். மேலும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை மால்களில் மரியாதையுடன் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.