தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட்டு ஒன்று தருவதாக அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராஜ்யசபா சீட்டு குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது, யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று அறிவித்திருந்தார்.

இது குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அப்படி எதுவும் வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என்று அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் கணக்கில் இருந்து “சாத்தியம் வெல்லும் நாளை நமதே” என்று பிரேமலதா விஜயகாந்த் பதிவு செய்திருந்தார். ஆனால் பதிவு செய்யப்பட்ட போஸ்ட் சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.