
உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் காதலியை சந்திப்பதற்காக இரவு 10:45 மணிக்கு தனது காதலியின் வீட்டின் இரண்டாவது மாடிக்கு ஏற முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காதலியின் தந்தை அனில் யாதவ் ஆத்திரத்தில் லவ்குஷை தன் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
அதில் லவ்குஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கி சத்தத்தை கேட்டு கிராமத்தில் இருந்த மக்கள் உடனடியாக அப்பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் லவ்குஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த அனில் யாதவை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.