உத்தரப் பிரதேச சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ-வை சட்டசபை தலைவர் சதீஷ் மஹானா கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இன்று சட்டசபையில் பேசிய அவர், “இங்கு உள்ளவர்களில் யாரோ ஒருவர் பான் மசாலா துப்பியதாக தகவல் கிடைத்தது. உடனே நான் அந்த இடத்தை சுத்தம் செய்யவைத்தேன். நான் இதை செய்த எம்.எல்.ஏ-வை பார்க்கவில்லை, ஆனால் சிசிடிவி காட்சிகளை பார்த்தேன். எனினும், அந்த உறுப்பினரை இங்கு குற்றம் சாட்டாமல் இருக்க விரும்புகிறேன்,” என்று கூறினார். மேலும், சட்டசபையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் போது உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், சதீஷ் மஹானா, அந்த இடத்தை சுத்தம் செய்ய பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ நேரில் வந்து தமது தவறை ஒப்புக்கொள்வது நல்லதாக இருக்கும் என்றும், இல்லையெனில் அவரை நேரடியாக அழைப்பேன் என்றும் மஹானா எச்சரித்துள்ளார். சட்டசபையின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என அவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.