சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடனமாடும் வேலை பார்த்து வருகிறார். தாய் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தி கடந்த 4 மாதங்களாக செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசியுள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி அன்று இளையமகன் தாயின் போனுக்கு தொடர்பு கொண்ட போது நம்பர் பிசி என்று வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த அவர், வீட்டிற்கு வந்து தாயின் செல் ஃபோனை எடுத்து அந்த நம்பர் யார் என்று பரிசோதனை செய்ததில் ராஜா என்ற பெயர் வந்துள்ளது. யார் அந்த ராஜா? என்று கேட்டு தந்தை மற்றும் மகன்கள் இருவரும் வசந்தியை டார்ச்சர் செய்துள்ளனர். கடந்த 17ம் தேதி  பொன்னுவேல், வசந்தியை ஆபாசமாக திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின் மகன்கள் இருவரும் யார் அந்த ராஜா என்று கேட்டு தாயை சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் ஐயோ என்னை விட்டு விடுங்கள் என்று கதறியும் மகன்கள் இருவரும் விடாமல் தாயின் மார்பில் எட்டி உதைத்துள்ளனர். அதோடு அவரது தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதி தாக்கியுள்ளனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிட்டு தாக்குதல் நடத்தியதில், அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அதன் பின் அவர்கள், வசந்தியின் தங்கைக்கு போன் செய்து அம்மாவை அடித்து விட்டோம் மயங்கி விட்டார் என்று தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த சுகந்தி, வசந்தியை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் 2 மகன்கள் மற்றும் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வசந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மகன்கள் தாக்கியதில் இதயம் முழுவதும் ரத்தம் கசிந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.