பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த போது இடதுபுறம் நின்று கொண்டிருந்த வேனை கவனிக்காமல் சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனம் வேனின் மீது மோதிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் பேருந்தின் சக்கரத்தின் அருகே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஹெல்மெட் இல்லாமல் பயணித்த அவர்கள் உயிர் தப்பிய சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் டேஷ்காம் கேமராவில் பதிவான நிலையில் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நெட்டிசன்கள் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் அவர் தன்னைத்தானே குற்றம் சாட்டுவாரா?இல்லையென்றால் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தனது பாதையை தடுத்ததற்காக அதன் மீது குற்றம் சாட்டுவாரா? என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதால் கர்மா வேகமாக வேலை செய்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.