
வல்லரசு நாடான அமெரிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளனர். உலகில் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடந்து வரும் நிலையில், உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசான நாடான அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலை அனைத்து நாட்டினரும் உற்று கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பல பிரபலங்கள் இரு தலைவர்களுக்கும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். ட்ரம்ப் ஆதரவாக எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி டைலர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டான டைட்டானிக் பட நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ தனது அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் கமலஹாரிசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் ஃப்ளோரிடோ, ஜார்ஜியா, வட கரோலினா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மிகப்பெரிய சூறாவளியால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது உடைமைகள், வீடுகள், உறவுகளை இழந்து மிகவும் துன்பப்படுகின்றனர்.
100 மில்லியன் டாலருக்கு மேல் பொருட்கள் சேதமடைந்து உள்ளதற்கு காரணம் காலநிலை மாற்றமே ஆகும். ஆனால் டிரம்ப் அறிவியலையும், காலநிலை மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்தை ஏற்க மறுத்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது சிறந்த வழியாகும். எனவே தான் நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க போவதாக தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார்.