உத்திர பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மோகன்புரா கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பூச்சு வேலை நடைபெற்று வந்தது. இதற்கு தேவையான மண்ணை அப்பகுதியில் திறந்த வெளியில் இருந்து அள்ளிய போது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பெண்கள் மண்ணுக்குள் சிக்கி புதைந்தனர். இதுவரை 9 பெண்கள் மீட்டெடுக்கப்பட்ட நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் சிக்கி புதைந்துள்ள மற்ற நபர்களை உடனடியாக மீட்டெடுக்கும் பணிகளை துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.