
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டு திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், அரியானா காவல்துறையினரின் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர் என்பதும், அவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்து வெண்கல பூஜை தட்டை கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.