
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இவரது குடும்பத்தினர் கோவைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் ரஞ்சித் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்றுள்ளார்.
அங்கு ரஞ்சித் தனது 15 வயதில் ஒரு மூதாட்டி இடம் 37.50 ரூபாய் திருடியதாகவும் அதனை அவரது வாரிசுகளுக்கு திருப்பி கொடுக்கவும் சென்றுள்ளார். அதன்படி அந்த பாட்டியின் மூன்று வாரிசுகளின் குடும்பத்தினரை சந்தித்து ஒவ்வொருவருக்கும் 70 ஆயிரம் ரூபாய் மொத்தம் 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு நாள் பைபிளை படித்துக் கொண்டிருந்தபோது ஒரு வாசகத்தை படித்தேன்.
அதனால் தான் வாங்கிய அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்த வேண்டும் என முடிவு செய்தேன். சிறு வயதில் பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பி தர வேண்டும் என்ற எண்ணத்தால் இலங்கைக்கு சென்று அவரது குடும்பத்தினரினை சந்தித்து பணத்தை திருப்பி அளித்தேன். மேலும் அவர்கள் தங்களுக்கு இப்பொழுது நெருங்கிய உறவினர்களாக மாறிவிட்டதாகவும் கூறினார். பாட்டியிடம் திருடிய பணத்தை தன் நண்பர்களுடன் செலவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.