தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில் வசிக்கத் தொடங்கியபோது தேனி நகர் கிராமத்தின் சாயலாக இருந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளில் தேனி நகரின் குடியிருப்பு வளர்ச்சி பன்மடங்காக பெருகியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து, ரெயில் வரும் நேரங்களில் அங்குள்ள  சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிகளில் வாகன நெரிசல் பெரும் அளவில் ஏற்படுவதால், தேனிக்கு ரெயில்வே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, மதுரை சாலையில் அதற்கான  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பாலம் அமைக்கும் பணிக்காக பங்களாமேடு மதுரை சாலையோரம் உள்ள 45 வீடுகள் மற்றும்  37 கடைகள் போன்றவற்றை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு முன் பலமுறை வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கபட்ட போதிலும், அதற்கு மாற்று இடம் கொடுப்பதில் தொய்வு ஏற்பட்டதால், வீடுகள் அகற்றப்படவில்லை. ஆனால், இந்த முறை  பணிகள்  நடப்பதை நேரில் பார்த்த மக்கள் வீடுகள் பறிபோகும் என்ற பயத்தில் தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கான மாற்று இடமாக வடவீரநாயக்கன்பட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது.

அதில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு,  ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 2.5 லட்சம் ரூபாய் பங்களிப்புத் தொகையாக கொடுத்தால் வீடு கிடைக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மக்களால் இயலாததால், தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு பதில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.