இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டிற்கு மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு குடிமகனையும் இந்த பட்ஜெட் தாக்கல் வளப்படுத்தி உள்ளது. இந்த நிதி பட்ஜெட் தரமான சுகாதாரம் மற்றும் கல்வி அணுகலை விரிவுபடுத்தி உள்ளது.

2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதியான பாதைக்கு இது வழி வகுத்துள்ளது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை இந்த பட்ஜெட் தாக்குதல் மூலம் மத்திய அரசு வலுப்படுத்தி உள்ளது. மேலும் கிராமப்புற, நகர்ப்புற பிரிவுகளை இணைக்கிறது மற்றும் எந்த ஒரு குடிமகனும் பின்தங்கி இருக்க வில்லை என்பதையும் இது உறுதி செய்துள்ளது.

இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில் முனைவோரை வளர்ப்பது மற்றும் ஜவுளி, மீன்வளத்துறை உட்பட்ட நிலையான விரிவான வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளது. காலநிலைகளுக்கு ஏற்றவாறு உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சரியான சமநிலைக்கும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பாரம்பரிய பெருமை கொள்ளும் இந்த பட்ஜெட் வளர்ச்சியின் சக்தி வாய்ந்த உந்து சக்தியாகும். இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.