
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே சேத்தூர் கணவாய் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் பாண்டியன். இவரது வீட்டில் குரங்குகள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது வீடு சேதமடைந்ததால் புதிய வீடு கட்டித் தருமாறு ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். குரங்கு சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எப்படி கட்ட முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கோபத்தில் சாலையில் உள்ள மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் சதீஷ் பாண்டியன் கீழே இறங்க மறுத்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். அதிகாரிகளிடமும் புதிய வீடு கட்டித் தருமாறு கேட்டு கோசமிட்டபடி மேலும் மேலே ஏறத் தொடங்கியுள்ளார். பின்னர் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனக்கூறி பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்க சம்மதிக்க வைத்தனர். பின்பு தீயணைப்பு துறையினர் உதவியுடன் சதீஷ்குமார் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார். இளைஞர் நூதன முறையில் போராட்டம் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.