திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த சரண்ராஜ், ராஜேஷ் மற்றும் மணி ஆகிய மூவரும் விடுமுறை நாளில் வீட்டிற்கு வந்து, ஆரணி பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தில் மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். இளைஞர்களின் திடீர் மரணம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.