
அமெரிக்காவில் விற்கப்படும் பிரபல பிஸ்கட்கள் நிறுவனம்”கேர்ள் ஸ்கவுட்ஸ்”. இந்த நிறுவனத்தில் விற்கப்படும் குக்கீஸ்களில் உயிருக்கு மிகவும் ஆபத்தான கனிமங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை விற்பதாக கூறி 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாம்ஸ் அக்ரோ அமெரிக்கா மற்றும் ஜி.எம்.ஓ சயின்ஸ் என்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த நிறுவனத்தின் பிஸ்கட்டில் அலுமினியம், ஆர்சனிக், ஈயம், மெர்குரி போன்ற கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை மேயா என்பவர் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி பாதிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், வியாபார நோக்கில் நெறிமுறைகளை மீறி கேர்ள் ஸ்கவுட்ஸ் பிஸ்கட் உணவு சுகாதார தர நிலையை மீறி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கலிபோர்னியா, ஐயோவா, லூசியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 25 பிஸ்கட்களில் 100% மிக அதிகமான கிளைபோசிட் மிக உயர்ந்த அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க பிரபலமான ஜோ ரோகன் இந்த ஆய்வை குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியில் கேர்ள் ஸ்கவுட்ஸ் குக்கீஸ்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கேர்ள் ஸ்கவுட் குக்கீஸ்கள் நிறுவனம் இந்த புகார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து கூறியதாவது, உணவு பாதுகாப்பு தரங்களை பின்பற்றி குக்கீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன எனவும், காற்று, நீர் மற்றும் மண் போன்ற சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவே உணவுப் பொருட்களில் இயற்கையாகவே சில கன உலோகங்கள் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அமெரிக்காவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மீறப்படுவது குறித்து முக்கியமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.