கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 2 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நின்று சண்டை போட்டுக் கொண்டது. அந்த யானைகள் ஒன்றை ஒன்று துதிக்கையாலும், தந்தத்தாலும் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டு பிளிறியது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் யானைகள் சண்டை போடுவதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.