
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். இந்த நிலையில் அந்த கிராமத்தின் காட்டுப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முயல் வேட்டையின் போது அப்பகுதியில் போடப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி இருவரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.