கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார். அதாவது ராபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு கர்நாடகா போக்குவரத்து துறை உத்திரவிட்டது.

கடந்த 2022 பைக் டாக்ஸி சேவைகளை பதிவு செய்ய தாக்கல் செய்த மனுக்களை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் மோட்டார் வாகன சட்டம் 1988 ன் படி விதிகள் வகுக்கப்படும் வரை பைக் டாக்ஸிகள் இயங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நான்கு வாரங்களுக்கு பின் போக்குவரத்து துறை உத்தரவை செயல்படுத்தியுள்ளது.

செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஒழுங்குமுறை விதிகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.